திருவள்ளூர்
கிருத்திகை தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
|கிருத்திகை தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் குவிந்தனர்.
திருத்தணி சுப்ரமணிய சாமி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் மாதம்தோறும் நடக்கும் கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மூலவரை வழிப்படுவர்.
இந்த நிலையில் நேற்று கிருத்திகை தினத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், இளநீர், போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு ஆராதனைக்கு பிறகு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கிருத்திகை தினம் மற்றும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த தினம் என்பதால் அருகில் உள்ள ஆந்திரா மாநிலம் மற்றும் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, போன்ற மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பொது வழியில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அதேபோல் ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.