கடலூர்
சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் பகுதி சிவன்கோவில்களில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஏகநாயகர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி மாலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம் மற்றும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்
இதேபோல் காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் உள்ள அனந்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இது தவிர கொல்லிமலை கீழ்பாதி சிவலோகநாதர் கோவில், லால்பேட்டை காசி விஸ்வநாதர் கோவில், மேல கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்க்ளில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
திட்டக்குடி-சேத்தியாத்தோப்பு
திட்டக்குடி அடுத்த திருவட்டதுறையில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்த புரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை யொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விடிய, விடிய நடைபெற்ற இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கடம்பாவனேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை யொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னலூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், சேத்தியாத்தோப்பு மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மங்கலம்பேட்டை
மங்கலம்பேட்டை மரகதாம்பிகா சமேத மாத்ருபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.