மதுரை
அழகுநாச்சியம்மன் அய்யனார் கோவில் திருவிழாவில் புரவி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
|திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் அழகு நாச்சியம்மன் அய்யனார் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில், புரவி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பரங்குன்றம்,
புரட்டாசி பொங்கல் விழா
திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் அழகு நாச்சியம்மன் கோவில், அய்யனார் கோவிலில் புரட்டாசி பொங்கல் கடந்த 2 நாட்கள் கொண்டாடப்பட்டது. விழாவின் முதல்நாளான நேற்றுமுன்தினம் அழகுநாச்சியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவை யொட்டிஅழகு நாச்சியம்மனுக்கு மகா அபிஷேகமும், சர்வ அலங்காரமும் தீப, தூப ஆராதனையும் நடந்தது.
திருவிழாவின் விசேஷமாக ஏராளமான பெண்கள் குலவையிட்டு பொங்கல்வைத்து அழகுநாச்சி அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து இருந்து தங்கள் வேண்டுதலின்படி மாவிளக்கு எடுத்தல், கரும்புள்ளி, செம்புள்ளி குத்துதல், அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
புரவி எடுப்பு
திருவிழாவின் 2-ம் நாளான நேற்று புரவி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி விளாச்சேரி குலாலர் சுல்லாக்கரை பகுதியில் அய்யனார் குதிரை உள்பட 11 குதிரைகள் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது. இந்த நிலையில் கிராம மக்கள் திரளாக குவிந்து இருந்து தங்களது நேர்த்திக்கடனாக குதிரையில் எழுந்தருளிய அய்யனாருக்கு மாலையை போட்டு வழிபட்டனர். இதே போல மற்ற 10 குதிரைகளுக்கும் மாலை அணிவித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த நிலையில் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில்அய்யனார் எழுந்தருளிய குதிரை புறப்பட்டது. இதைதொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக 10 குதிரைகளும் ஊர்வலமாக சென்றது. அக்ரஹாரம் சென்றதும் கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து புரவிகளை கைபாரமாக பக்தர்கள் ஊர்வலமாக அய்யனார் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.