< Back
மாநில செய்திகள்
கோவில்களுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
அரியலூர்
மாநில செய்திகள்

கோவில்களுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தினத்தந்தி
|
12 Aug 2023 12:30 AM IST

கோவில்களுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பால்குடம்

அரியலூரில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். இதில் சடையப்பர் தெரு, எத்திராஜ் நகர், மேற்கு தெரு, பெரிய தெரு பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கும், ஆஸ்பத்திரி ரோடு, கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதில் பக்தர்கள் அலகு குத்தியும், பறக்கும் காவடி எடுத்தும் சென்றனர். பின்னர் கோவில்களில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சாமி வீதி உலா நடந்தது.

அரியலூர் மேலத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் 108 சேலைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஊஞ்சலில் அம்மனுக்கு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, ஆவேரி கரையில் உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு, அருகில் உள்ள நாச்சியார் குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் துர்க்கை அம்மனுக்கு பாலாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் காளி ஆட்டமும், பின்னர் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் துர்க்கை அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், வாண வேடிக்கையும் நடைபெற்றது.

செந்துறை

செந்துறை அருகே சோழன்குடிகாடு கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் நடந்த பால்குட திருவிழாவையொட்டி ஏரியில் மாரியம்மனுக்கு பூஜைகள் செய்து, பக்தர்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். மேலும் பக்தர்கள் கொண்டு வந்த பூஜை பொருட்களை மகா மாரியம்மனுக்கு படைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் செய்திகள்