புதுக்கோட்டை
செல்லாயி அம்மன் கோவில் திருவிழா
|செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கீரனூர் அருகே புலியூர் கிராமத்தில் செல்லாயி அம்மன், சங்கிலி கருப்புபிடாரி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் நடந்த கொலை சம்பவத்தால் இந்த ஆண்டு திருவிழாவை நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையில் நடந்த கூட்டத்தில், எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும், மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமிகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று பக்தர்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு கிடா வெட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு கீரனூர் போலீஸ் சூப்பிரண்டு் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.