நீலகிரி
காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
|சந்தன மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருத்தேர்கள் வீதி உலா நடந்தது. மேலும் காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
கூடலூர், ஏப்.5-
சந்தன மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருத்தேர்கள் வீதி உலா நடந்தது. மேலும் காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
சந்தன மலையில் பங்குனி உத்திரம்
கூடலூர் தாலுகா சந்தனமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இரவு 9 மணிக்கு பார்வுட் சிவன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர்களில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்தார். தேர் கிளன்வன்ஸ் உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக சென்று கோவிலை அடைந்தது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
உத்திர கலச பூஜை
நேற்று காலை 5 மணிக்கு முருகன், அம்மன், நவக்கிரக ஹோமங்களும், தொடர்ந்து உத்திர கலச பூஜையும் நடைபெற்றது. பின்னர் அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இன்று (புதன்கிழமை) காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. முன்னதாக கூடலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து காட்டு யானைகள் அச்சுறுத்தலை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
கோவில் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.