கடலூர்
பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
|கடலூர் சோலைவாழியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.
கடலூர்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலனியில் அமைந்துள்ள சோலைவாழியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வண்டிப்பாளையம் ஸ்டேட் பேங்க் காலனி பின்புறம் உள்ள ராஜயோக அய்யனார் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக வந்து சோலைவாழியம்மன் கோவிலை வந்தடைந்தனர். சிலர் அம்மன் வேடமிட்டும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் சக்தி யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த சக்தி கரகம் வீரஆஞ்சநேயர் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிலை வந்தடைகிறது. காலை 10 மணி அளவில் சோலை வாழியம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சாகை வார்த்தல் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு ராஜயோக அய்யனார் கோவிலில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) சோலை வாழியம்மன் ஊஞ்சல் உற்சவமும், நாளை மறுநாள் (புதன்கிழமை) இசைநிகழ்ச்சி, 10-ந்தேதி மண்டகபடி, 11-ந்தேதி தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடக்கிறது.