திருவண்ணாமலை
பிச்சை எடுக்கும் பெண்களால் பக்தர்கள் அவதி
|திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வழிப்பறியில் ஈடுபடுவது போன்று துரத்தி சென்று பிச்சை எடுக்கும் பெண்களால் பக்தர்கள் அவதியடைந்து உள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வழிப்பறியில் ஈடுபடுவது போன்று துரத்தி சென்று பிச்சை எடுக்கும் பெண்களால் பக்தர்கள் அவதியடைந்து உள்ளனர்.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் வாயில்கள் வழியாக தான் பக்தர்கள் சென்று வரும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பே கோபுரம் வழியாக பக்தர்கள் சென்று வர அனுமதி இல்லை. பெரும்பாலும் வெளியூரில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு அம்மணி அம்மன் மற்றும் திருமஞ்சன கோபுரம் வழியாக தான் கோவிலுக்குள் சென்று வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் வாயில்களில் பிச்சைக்காரர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தர்மம் வழங்காத பக்தர்களை அவர்கள் தகாத வார்த்தைகளால் வசைபாடுகின்றனர். இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மிகவும் வேதனை அடைகின்றனர்.
கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்
சில சமயங்களில் பெண் பக்தர்களை 4 மற்றும் 5 பேராக சூழ்ந்து கொண்டு அவர்கள் பணம் கொடுக்கும் வரை துரத்தி சென்று வழிப்பறியில் ஈடுபடுவது போன்று செயல்படுகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஆடிக்கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.
அம்மணி அம்மன் கோபுர வாயில் வழியாக வந்து சென்ற பக்தர்களை பிச்சை எடுப்பதாக கூறி துரத்தி, துரத்தி சென்று தொல்லை செய்து பணத்தை வாங்கி சென்றனர். ஒரு பெண்ணை அவரது கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடம் வரை பிச்சை எடுத்த பெண்கள் துரத்தி சென்று பணத்தை வாங்கி சென்றனர்.
அந்த பெண் என்ன செய்வது எனதெரியாமல் கண்களில் கண்ணீர் மல்க அழுதபடி சென்றார். பிச்சைக்காரர்களின் அட்டூழியத்தை கோவில் நிர்வாகம் துளியும் கண்டு கொள்வதில்லை.
அம்மணி அம்மன் கோபுரம் வாயில் வழியாக தான் கோவில் இணை ஆணையர் உள்பட அலுவலர் மற்றும் ஊழியர் வந்து செல்கின்றனர்.
ஆனால் அவர்கள் பக்தர்கள் படும் அவதியை கொஞ்சம் கூட கண்டு கொள்வதில்லை.
எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் வாயில்கள் பணியாளர்களை நிறுத்தி பக்தர்களை பாதுக்காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.