< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்

தினத்தந்தி
|
17 April 2023 12:30 AM IST

வார விடுமுறை நாளையொட்டி, பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் படையெடுத்தனர். 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பழனி முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சுபமுகூர்த்தம், வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதும்.

அந்தவகையில் தமிழ் புத்தாண்டு, வாரவிடுமுறை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் கடந்த 3 நாட்களாக வௌியூர் பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.

குறிப்பாக நேற்று முன்தினம் கேரள புத்தாண்டான சித்திரை விஷூ என்பதால், அந்த மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

பக்தர்கள் காத்திருப்பு

இதேபோல் நேற்று வாரவிடுமுறை என்பதால், பழனியில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் வெளிப்பிரகாரம், தரிசன வழிகள் ஆகிய இடங்களில் பக்தர்கள் குவிந்தனர்.

ரோப்கார், மின்இழுவை ரெயிலில் செல்ல அதன் நிலையங்களில் கவுண்ட்டரை தாண்டி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் நேற்று சுமார் 2 மணி நேர காத்திருப்புக்கு பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்ததால் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக வரிசையில் காத்திருக்கையில் தலையில் முக்காடு போட்டபடி நின்றனர். ஒருசிலர் கையில் குடையை பிடித்து காத்திருந்தனர். வெயிலால் குழந்தைகள், முதியோர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்