திண்டுக்கல்
பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
|வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்தனர்.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகின்றனர். இதனால் காலை, மாலை வேளையில் அடிவாரம், கிரிவீதிகளில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் கேரள மாநில பக்தர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினமே ஏராளமான பக்தர்கள் பழனி அடிவார பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கினர். அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பழனி கோவிலுக்கு படையெடுத்தனர். இதனால் அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் மலைக்கோவில் செல்லும் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் பொது, கட்டண மற்றும் கட்டளை தரிசன வழிகளிலும் பக்தர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது. அதன்படி 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பழனிக்கு வந்த பக்தர்கள் பலர் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்தியும், தங்கரதம் இழுத்தும் வழிபட்டனர்.