அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கருடனை தரிசித்த பக்தர்கள்
|அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் நின்று பக்தர்கள் கருடனை தரிசித்து செல்கிறார்கள்.
கருட பகவான்
விஷ்ணு பகவானின் வாகனம் என்று சொல்லப்படும் கருடன், பருந்து வகையை சேர்ந்தது. இந்த கருடனை தினமும் வழிபட்டு வந்தால் நன்மை நடக்கும். பணக்கஷ்டம் வராது என்பது ஐதீகம். இந்தநிலையில், அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி, வாலாஜாநகரம், செந்துறை, திருமானூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கருட பகவானை மிகவும் பயபக்தியுடன் வணங்குகின்றனர். இதில் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் அருகே உள்ள மரத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் மாலை 6 மணிக்குள் கருடன் வந்து அமர்கிறது. மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் இந்த கருட பகவானை காண சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலரும் தங்கள் வாகனத்திலும், நடந்தும் வருகின்றனர்.
இவ்வாறு வந்தவர்கள் மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் கருடனை பயபக்தியுடன் கைகூப்பி வணங்குகின்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வந்தவர்கள் கருடனை தரிசித்து விட்டு கருடன் சென்ற பிறகு தான் தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.
மனதிற்கு நிம்மதி
இதுகுறித்து கல்லங்குறிச்சி பகுதி மக்களிடம் கேட்டபோது,
இந்த வழக்கம் எல்லா மாவட்டங்களிலும் உண்டு. அரியலூர் மாவட்டத்தில் வாலாஜாநகரம், செந்துறை, கல்லங்குறிச்சி, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சாலையோரம் திரண்டு கருடனை வழிபடுவார்கள். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் கருட பகவானை தரிசித்து வருகிறோம். இவ்வாறு கருட பகவானை வழிபடும்போது மனதிற்கு நிம்மதியும், வீட்டில் பண கஷ்டமும் வருவதில்லை என்று கூறுகின்றனர். அதோடு பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் நாங்கள் நம்புகிறோம். வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பலர் திரண்டு இவ்வாறு வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.