விருதுநகர்
கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்
|சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வத்திராயிருப்பு,
சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பிரதோஷ வழிபாடு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட 5 மற்றும் 6-வது பீட் பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக காட்டு தீ பரவியது. தொடர்ந்து தீ கட்டுக்குள் வராததால் பாதுகாப்பு காரணமாக நேற்று பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரதோஷ வழிபாட்டிற்காக நேற்று அதிகாலை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர். வனத்துறையினர் பக்தர்களிடம் மலைப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு கருதி பிரதோஷ வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வாக்குவாதம்
பக்தர்கள் தங்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் நீண்ட நேரம் வனத்துறை கேட்டின் முன்பு காத்திருந்தனர்.
பின்னர் அடிவாரப் பகுதியிலேயே பொங்கலிட்டு, முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அனுமதி இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.