பெரம்பலூர்
ஸ்ரீரங்கத்தில் இருந்து காவிரி தீர்த்தக்குடங்களுடன் பக்தர்கள் பாதயாத்திரை
|மதனகோபாலசுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் இருந்து காவிரி தீர்த்தக்குடங்களுடன் பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் 24-வது ஆண்டு ஆடி பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதனகோபாலசுவாமி உற்சவ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பெரம்பலூர் நகரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு குழுக்களாக திருச்சிக்கு சென்று ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தத்தை குடங்களில் சுமந்து பாதயாத்திரையாக பெரம்பலூருக்கு புறப்பட்டனர். சிறுவாச்சூரில் மதுரகாளியம்மனை தரிசனம் செய்து பெரம்பலூருக்கு வந்தனர். அதனைத்தொடர்ந்து காவிரி தீர்த்த ஊர்வலம் வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம் அதிர்வேட்டுகள் முழங்க தெற்கு தெரு, கடைவீதி. தேரடி வழியாக மதனகோபாலசுவாமி கோவிலுக்கு வந்தடைந்தது. ஊர்வலத்தில் பாதயாத்திரை வந்தவர்கள் கோவிந்தா, கோபாலா, ஆஞ்சநேயா என்ற கோஷத்துடன் வந்து, மதனகோபாலசுவாமி கோவிலில் கம்பம் ஆஞ்சநேயருக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் செய்தனர். பின்னர் ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.