< Back
மாநில செய்திகள்
விமான நிலைய ஓடுதளத்தில் சுவாமியை ஊர்வலமாக கொண்டு சென்று பூஜை நடத்திய பக்தர்கள்
திருச்சி
மாநில செய்திகள்

விமான நிலைய ஓடுதளத்தில் சுவாமியை ஊர்வலமாக கொண்டு சென்று பூஜை நடத்திய பக்தர்கள்

தினத்தந்தி
|
11 Jun 2022 2:47 AM IST

விமான நிலைய ஓடுதளத்தில் சுவாமியை ஊர்வலமாக கொண்டு சென்று பக்தர்கள் பூஜை நடத்தினார்கள்.

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தை அடுத்த கோளரங்கம் அருகில் உள்ள பிறாயடி கருப்பு கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவானது ஆங்கிலேயர் காலம் முதலே நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திருவிழாவின்போது திருச்சி விமான நிலைய ஓடுதளம்(ரன்வே) அருகில் உள்ள அய்யனார் மற்றும் காளியம்மன் கோவில் பகுதிக்கு சிறப்பு அனுமதி பெற்று பக்தர்கள் விமான நிலைய வளாகத்திற்குள் சென்று, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு பூஜையானது சுமார் 150 ஆண்டு காலமாக கொட்டப்பட்டு கிராம மக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி திருவிழா நடைபெறுவதற்கு சுமார் ஒரு மாத காலம் முன்பாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் கொட்டப்பட்டு கிராம மக்கள் இணைந்து பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்துவார்கள். இதில் விமான நிலைய ஓடுதளம் அருகில் உள்ள அய்யனார் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு சிறப்பு பூஜை நடத்துவதற்காக ஊர்வலமாக சென்று வர அனுமதி குறித்து ஆலோசிக்கப்பட்டு, வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவிற்காக கடந்த மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தி சிறப்பு அனுமதி பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவிழா தொடங்கி நடைபெற்றது. இதில் கடைசி நாள் திருவிழாவையொட்டி நேற்று காலை விமான ஓடுதளம் அருகில் உள்ள அய்யனார் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு செல்ல விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் விமான நிலைய வளாகத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அய்யனார் உருவமானது சிறப்பு சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் வைக்கப்பட்டு ஊர்வலமாக ஓடுதளத்தில் கொண்டு ெசல்லப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பின்னர் மீண்டும் பிறாயடி கருப்பு கோவிலுக்கு சப்பரத்தை ஊர்வலமாக பக்தர்கள் கொண்டு வந்தனர். அந்த கோவிலில் சப்பரத்தை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்