திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்...!
|திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த நிலையில் இன்று திருவண்ணாமலையில் வெயில் வெளுத்து வாங்கியது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் வெயிலின் சூடு தெரியாமல் இருக்க தேங்காய் நார் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது. ஒரு சில பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.