< Back
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருச்சி
மாநில செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
22 March 2023 2:03 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அமாவாசை என்பதால் காலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் சமயபுரம் வந்தனர். அவர்கள் முடிகாணிக்கை செய்தும், அக்னிச்சட்டி ஏந்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கேற்றி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து இலவச தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசை ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்காக குவிந்தனர்.

இரவு நேரமாக ஆக கோவிலுக்குள் செல்லும் ஆர்வத்தில் பக்தர்கள் முண்டியடித்தனர். மேலும் பக்தர்கள் தடுப்பு கட்டைகளை தாண்டியும், தடுப்பு வேலிக்குள் புகுந்தும் உள்ளே செல்ல முயன்றனர். இதனால் பக்தர்கள் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரும்பு தடுப்புகளை அமைத்தும், கயிறு கட்டியும், பக்தர்களை வரிசையாக செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் கோவிலுக்குள் சென்றனர் இதனால், அங்கு சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்