சிவகங்கை
திருப்புவனம் வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
|ஆடி அமாவாசையையொட்டி திருப்புவனம் வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர்.
திருப்புவனம்
ஆடி அமாவாசையையொட்டி திருப்புவனம் வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர்.
வைகை ஆற்றில்...
திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வைகை ஆற்றங்கரையில் சிவகங்கை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தினமும் வந்து திதி, தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள். இதேபோல் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிவகங்கை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கின்றனர். குறிப்பாக தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் ஏராளமான மக்கள் வருவது வழக்கம். அமாவாசை தினங்களில் திருப்புவனம் வைகை ஆற்றுக்குள் நீளமான பந்தல்கள் அமைத்து திதி, தர்ப்பணம் தனித்தனியாக நடைபெறும்.
தர்ப்பணம்
இந்த நிலையில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி காலை முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக திருப்புவனம் வைகை ஆற்றுக்கு வந்தனர். முன்னதாக பக்தர்களின் வசதிக்காக வைகை ஆற்றில் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை வைகை ஆற்றின் உள்பகுதியில் உள்ள பந்தலில் நீளமாக அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க செய்தனர். பிறகு பொதுமக்கள் புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். இதனையொட்டி மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.