< Back
மாநில செய்திகள்
பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
24 Sept 2023 12:15 AM IST

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை

தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் நேற்று காலை ஆதி ஜெகநாதர் பெருமாள், பத்மாசனித் தாயார், கல்யாண ஜெகநாத பெருமாள், கோதண்ட ராமர், சந்தானகிருஷ்ணர், தர்ப்பசயனராமருக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து ஆதி ஜெகநாதர் பெருமாள் சன்னதி எதிரே உள்ள மண்டபத்தில் உற்சவ கல்யாண ஜெகநாதர் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் வைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின் பேரில் திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் கோவில் பேஸ் கார் பாலாஜி உள்ளிட்ட கோவில் பணியாளர்களும் செய்திருந்தனர்.

திரளான பக்தர்கள் தரிசனம்

அதேபோல் ராமேசுவரம் ராம் தீர்த்தம் பகுதியில் உள்ள ராமர் கோவில் மற்றும் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவில், தங்கச்சிமடம் ஏகாந்த ராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பாண்டுகுடி லெட்சுமி நாராயண பெருமாள்கோவில், தொண்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோவில், புலியூர் ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் கோவில், திருவாடானை ஜெய வீரஆஞ்சநேயர் கோவில், மண்டல கோட்டை செங்கமல தாயார் சமேத பிருந்தாவனநாதபெருமாள்கோவில், கீழக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் திருவாடானை, முதுகுளத்தூர், சாயல்குடி, ராமநாதபுரம் என மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

மேலும் செய்திகள்