< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
21 Aug 2023 1:15 AM IST

வாரவிடுமுறை மற்றும் முகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பழனியில் குவிந்த பக்தர்கள்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விசேஷம், முகூர்த்தம் மற்றும் வாரவிடுமுறை நாட்களில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

அதன்படி நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளாகும். இதனால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பாதவிநாயகர் கோவில், மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய காலை முதலே பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

150 திருமணங்கள்

இதேபோல் நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வைத்து ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி கோவிலில் மணமக்கள் கூட்டமும் அலைமோதியது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 150 திருமணங்கள் திருஆவினன்குடி கோவிலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திருஆவினன்குடி கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை அடிவாரம், அய்யம்புள்ளி சாலையோர பகுதியில் நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அடிவாரம் போலீசார் வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

1½ மணி நேரம் காத்திருப்பு

பழனி முருகன் கோவிலில் இயக்கப்படும் ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அதன் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே நேற்று பழனிக்கு வந்த பக்தர்கள் மின்இழுவை ரெயில்கள் மூலம் மலைக்கோவிலுக்கு செல்ல திரண்டனர். இதனால் அங்கு கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அதாவது, கவுண்ட்டரை கடந்து கிரிவீதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோவிலில் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்