< Back
மாநில செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு செல்ல கும்பகோணம் பஸ் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு செல்ல கும்பகோணம் பஸ் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
1 Oct 2023 1:43 AM IST

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு செல்ல கும்பகோணம் பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம்:

சனீஸ்வரர் கோவில்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடக்கும். இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், சனிபெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில், நேற்று புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கும்பகோணம் மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் சென்றனர்.

பக்தர்கள் குவிந்தனர்

இதற்காக மேற்கண்ட பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் கும்பகோணம் பஸ் நிலையத்துக்கு வந்து இங்கிருந்து காரைக்கால் செல்லக்கூடிய பஸ்களில் தான் செல்ல முடியும். அதன்படி நேற்று அதிகாலையில் கும்பகோணம் பஸ் நிலையத்தில் காரைக்கால் செல்ல பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பஸ் நிலையத்தின் வாசலில் இருந்து பஸ் நிற்கும் இடம் வரை பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

அதிகாலை நேரம் என்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். இதனால் பஸ்களில் பக்தர்கள் முண்டி அடித்து கொண்டு ஏறினர். சிலர் பஸ்களில் இடம் பிடிக்க குழந்தைகளை ஜன்னல் வழியாக அமர வைத்ததையும் காணமுடிந்தது. சிலர் தங்களில் பொருட்களை சீட்டுகளில் போட்டு இடம்பிடித்தனர். இதனால் பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் அதிகம் காணப்பட்டதால் பெரும்பாலானோர் பஸ் படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்தனர்.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பொதுவாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். இதனையே வழக்கமாக கொண்டு முக்கிய நிகழ்ச்சி நாட்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி காரைக்கால் செல்ல ஏராளமானோர் குவிந்தனர். இவர்களுக்கு போதிய பஸ்கள் கிடைக்கவில்லை. அதிகாலையிலேயே சென்றால் தான் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யமுடியும். ஆனால் பஸ்கள் பெரும்பாலும் காலை 6 மணிக்கு மேல் இயக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்