திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பக்தர்கள் கிரிவலம்
|திண்டுக்கல்லில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி மலைகோட்டையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டையின் உச்சியில் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி சிலைகள் இல்லாததால் கடந்த 2 நூற்றாண்டுகளுக்கு மேலாக வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. எனினும் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனை மனமுருக வேண்டி மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
அதன்படி நேற்று ஆனி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதையொட்டி மலைக்கோட்டை வாசலில் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் எழுந்தருள சிவ வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
அதேபோல் திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள அபிராமி அம்மன்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் சென்றனர். அப்போது பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனை வேண்டி பக்தி பாடல்களை பாடியபடி வலம் வந்தனர். மேலும் கிரிவல பாதையில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்தனர். அதேபோல் கிரிவல பாதையில் பெண்கள் வீட்டு முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.