தஞ்சாவூர்
ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
|ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி தஞ்சையில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சீர் வரிசை தட்டுகளுடன் வந்து பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி முதல் வெள்ளி
ஆடிமாதம் அம்மனுக்கு விஷேசமான மாதம் ஆகும். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு வளையல் பாவாடை அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை வழிபட்டனர். கோவில் வளாகத்தில் கூழ் பிரசாதமாக வழங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்காரு காமாட்சி அம்மன்
தஞ்சை மேல வீதியில் உள்ள பங்காரு காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு சீர் வரிசை தட்டுகள் எடுத்து சாமி தரிசனம் செய்தனர். கீழவாசல் வடபத்திரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் பூமாலை, எலுமிச்சை மாலைகளை சாமிக்கு வழங்கி, அகல்விளக்குகள், எலுமிச்சை தோளில் எண்ணெய், நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் சாலையில் உள்ள மகிசாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சக்தி முனியாண்டவர் கோவில்
இதேபோல் தஞ்சை பில்லுக்காரத்தெருவில் உள்ள சக்தி முனியாண்டவர் கோவிலில் முனியாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோடியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், பர்மாகாலனி அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.