< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் - 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
மாநில செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் - 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

தினத்தந்தி
|
14 May 2023 11:11 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று கோவிலில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு ராக்கால அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூரில் குவிந்தனர்.

அவர்கள் கடலில் புனித நீராடி, கட்டண தரிசன வரிசையிலும், இலவச தரிசன வரிசையிலும் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.250, ரூ.100, ரூ.20, இலவச தரிசனம் என 4 வழியாக சென்ற பக்தர்கள் தற்போது ரூ.100 மற்றும் இலவச தரிசனம் என்ற இரண்டு வரிசையில் செல்கின்றனர். இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

மேலும் கைக்குழந்தைகளை கொண்டு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மிகவும் சிரமப்படுகின்றனர். பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை முழு முயற்சி எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்