< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

தினத்தந்தி
|
6 Feb 2023 12:15 AM IST

தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச திருவிழா

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வது தனிச்சிறப்பு ஆகும்.

கடந்த ஆண்டு கொரோனா பரவலால் பழனி தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவை எண்ணி காத்திருந்தனர்.

இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் 29-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாளில் இருந்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வழிபட்டனர்.

6 மணி நேரம் காத்திருப்பு

தைப்பூச திருவிழாவின் 8-ம் நாளான நேற்று, பழனி முருகப்பெருமானை தரிசிக்க அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் சங்கமித்தனர். இதனால் பஸ்நிலையம், பூங்காரோடு, சன்னதிவீதி, கிரிவீதிகள், அடிவாரம் என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பாதயாத்திரையாகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் மேள, தாளத்துடன் மயில்காவடி எடுத்து ஆடியபடி நகர் வீதிகளில் வலம் வந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் பழனி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பஸ்நிலையம், திண்டுக்கல் ரோடு ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பஸ்நிலையத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

எனவே நெரிசல் மற்றும் பாதுகாப்பு கருதி சன்னதி வீதி, வடக்கு கிரிவீதியில் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு சீரான முறையில் அனுப்பப்பட்டனர். பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் பொது தரிசனம், கட்டணம் என அனைத்து தரிசன வழிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

சுமார் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்