திண்டுக்கல்
பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
|பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அலைமோதியது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வாரவிடுமுறை, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக கேரளா, கர்நாடக மாநில பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு வருகின்றனர்.
அந்தவகையில் முகரம், வாரவிடுமுறை என 2 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று அதிகாலை முதலே அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில், கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலில் உள்ள பொது, கட்டணம் மற்றும் கட்டளை தரிசன வழியாக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
கூட்டம் காரணமாக சுமார் 1½ மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர். இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையங்களிலும் வெகுநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.