< Back
மாநில செய்திகள்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

தினத்தந்தி
|
13 Aug 2022 1:10 AM IST

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தங்க கவசம்

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலுக்கு நேற்று காலை முதலே கூட்டம், கூட்டமாக பக்தர்கள் வந்தனர். மதியம் மதுரகாளியம்மனுக்கு மேள தாளம் முழங்க, பக்தி இன்னிசை கச்சேரியுடன் பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற கோவிலில் மாவு இடித்து, மாவிளக்கு செய்து வழிபாடு நடத்தினர். வேண்டுதலை துண்டு சீட்டில் எழுதி கோவில் மரங்களில் கட்டிவிட்டனர். வாடா விளக்கில் எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றினர். இரவில் கோவில் உள்பிரகாரத்தில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்