திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கோயிலில் தங்க கூடாது - கலெக்டர் அதிரடி
|திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா இந்த மாதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் இந்த மாதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நடைபெறுவதையொட்டி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவுக்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் வீதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த மாதம் 30-ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வருகை தருவதால் பல்வேறு வழித்தடங்களில் 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயங்கப்படும். சூரசம்ஹாரம் அன்று தென்னக ரயில்வே மூலம் சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
கந்த சஷ்டித் திருவிழா காலங்களில் நகர் முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் செல்போன், தொலைபேசி சீராக இயங்கத்தக்க வகையில் தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்க பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் மாலை அணிவித்து வரும் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர் குழுஉறுப்பினர்கள் கணேசன், செந்தில்முருகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.