< Back
மாநில செய்திகள்
பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
கரூர்
மாநில செய்திகள்

பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

தினத்தந்தி
|
11 April 2023 6:50 PM GMT

தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருவிழா

கரூர் தாந்தோன்றிமலையில் முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்தவகையில் இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி கடந்த 2-ந் தேதி அமராவதி ஆற்றில் இருந்து மாரியம்மனுக்கு கம்பம் பாலித்து வந்து கம்பம் நடும் விழா நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேகமும், மாலையில் சிம்ம வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், யானை வாகனம், வேப்பமர வாகனம், புலி வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதியுலா நடந்து வருகிறது. 7-ந் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது.

பால்குடம்

இந்நிலையில் நேற்று காலை அமராவதி ஆற்றில் இருந்து முத்துமாரியம்மன், பகவதியம்மனுக்கு அக்னி சட்டி, அலகு அழைத்து வந்து பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடைபெற்றது. இதனையொட்டி கரூர் அமராவதி ஆற்றில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (வியாழக்கிழமை) 13-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மாவிளக்கு பூஜையும், மாலை 5 மணியளவில் மாரியம்மன் கம்பம், பகவதியம்மன் கரகம் ஆற்றுக்கு கொண்டு விடுதல் நிகழ்ச்சியும், வாணவேடிக்கையும் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்