ராமநாதபுரம்
பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
|சாயல்குடி அருகே பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி னர்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி னர்.
பூக்குழி திருவிழா
சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் முகரம் பண்டிகையை முன்னிட்டு மாமுனாச்சி அம்மன் கோவிலில் சமூக நல்லிணக்க பூக்குழி திருவிழா நடைபெற்றது. முகரம் பண்டிகையையொட்டி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் பூக்குழி இறங்கியும், பெண்கள் தலையில் தீ கங்குகளை போட்டும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருவது காலங்காலமாக பெரியகுளம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒன்றிணைந்து இவ்விழாவினை நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய பிறை பச்சைக் கொடியை கையில் ஏந்தி பூக்குழி இறங்கி ஒவ்வொரு ஆண்டும் கிராமத்தினர் வழிபட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மத நல்லிணக்க திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கொடிய நோய்
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் அசேன், உசேன் என்ற சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் அப்போது நடந்த போரில் இறந்துனர். அவர்களது உடன்பிறந்த சகோதரி மாமுனாச்சி சகோதரர்கள் இறந்த செய்தியை கேள்விப்பட்டு கட்டைகளை வைத்து தீ வைத்து அதில் இறங்கி தனது உயிரை மாய்த்தார். அதன் பின்பு பெரியகுளம் பகுதியில் கொடிய நோய் பரவி ஒவ்வொருவராக இறந்தனர்.
அந்த சமயத்தில் அங்குள்ள பெண் ஒருவரின் கனவில் மாமுனாச்சி தோன்றி முகரம் அன்று பூக்குழி வளர்த்து ஆண்கள் அதில் இறங்கியும், பெண்கள் தலையில் தீ கங்குகளை போட்டு நேர்த்தி கடன் செலுத்தினால் இக்கொடிய நோய் மாறும் என தெரிவித்தார்.
100 ஆண்டுகளுக்கு மேலாக
அதன்படியே கிராமத்தினர் பூக்குழி இறங்கினர். இதையடுத்து அந்த நோய் மாறியது. இதன்காரணமாக 100 ஆண்டுகளுக்கு மேலாக மாமுனிச்சி அம்மனுக்கு சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்களுடன், இந்துக்களும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் வழிபடும் முறை ஒவ்வொரு ஆண்டும் பெரியகுளம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது என்றார்.
நேற்று அதிகாலையில் நடைபெற்ற இந்த சமூக நல்லிணக்க பெருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மற்றும் இந்து மத ஆண்களும், பெண்களும் வழிபாட்டில் ஈடுபட்டனர். கடலாடி, சாயல்குடி, மாரியூர், வாலிநோக்கம், முந்தல், ஒப்பிலான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.