< Back
மாநில செய்திகள்
திற்பரப்பு கோவிலுக்கு வந்த பக்தரின் செல்போன், பணம் திருட்டு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

திற்பரப்பு கோவிலுக்கு வந்த பக்தரின் செல்போன், பணம் திருட்டு

தினத்தந்தி
|
31 Dec 2022 12:32 AM IST

திற்பரப்பு கோவிலுக்கு வந்த பக்தரின் செல்போன், பணத்தை திருடி சென்ற மர்மஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

குலசேகரம்,

திற்பரப்பு கோவிலுக்கு வந்த பக்தரின் செல்போன், பணத்தை திருடி சென்ற மர்மஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

பக்தரிடம் திருட்டு

குலசேகரம் அருகே அரமன்னம் கருங்காட்டு விளையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 43). இவர் 2 பிள்ளைகளுடன் திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு நேற்றுமுன்தினம் காலையில் சாமி கும்பிட சென்றார். அப்போது கோவிலின் வெளிப்பகுதியில் தனது சட்டையை கழற்றி வைத்தார். அதில் செல்போனையும், ரூ.250-ஐயும் வைத்து விட்டு கோவிலுக்கு உள்ளே சென்றுள்ளார்.

பின்னர் சாமிகும்பிட்டு விட்டு வெளியே வந்து சட்டையை எடுத்து பார்த்த போது செல்போன், பணத்தை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்மஆசாமி ராஜேஷ்குமாரை நோட்டமிட்டு கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணை

சட்டைப்பை வைத்திருந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லை. இதனால் வேறு இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும்படியான நபர் நடமாட்டம் இருக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திற்பரப்பு கோவில் மற்றும் அருவி பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்று வரும் நிலையில் இங்கு பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கோவிலின் வெளிப்பகுதிகளில் கேமரா பொருத்தப்படும் என கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்