திண்டுக்கல்
கடம்ப மலர்களை சூடி பக்தர்கள் கிரிவலம்
|பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழுதிருவிழாவையொட்டி, கடம்ப மலர்களை சூடியபடி மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
கழு திருவிழா
பழனி முருகன் கோவிலில் கோடைகாலத்தில் அக்னி நட்சத்திர கழுதிருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத கடைசி 7 நாட்கள், வைகாசி மாத முதல் 7 நாட்கள் என 14 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த நாட்களில் பக்தர்கள் காலை, மாலை வேளையில் பழனி கிரிவீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். அவ்வாறு கிரிவலம் வரும்போது சுத்தமான சஞ்சீவி காற்று வீசும் என்றும், இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும் என்பது நம்பிக்கை. மேலும் கிரிவலத்தின்போது கடம்ப மலர்களை பெண்கள் சூட்டி கொள்கின்றனர்.
பக்தர்கள் கிரிவலம்
அதன்படி இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கழு திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை வேளையில் பக்தர்கள் பழனி மலையை சுற்றிலும் கிரிவலம் வந்து வழிபட்டனர்.
இந்நிலையில் கழுதிருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பழனி மலையை சுற்றிலும் கிரிவலம் வந்தனர்.
அப்போது பெண்கள் கடம்ப மலர்களை தலையில் சூடிக் கொண்டும், கையில் ஏந்தியும் சென்றனர். இதற்காக கிரிவீதியில் ஆங்காங்கே இலையுடன் கூடிய கடம்ப மலர்கள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பக்தர்கள் கிரிவலம் வந்தபோது அழகுநாச்சி அம்மன் கோவில், வனதுர்கை அம்மன், மகிஷாசூரமர்த்தினி அம்மன், வீரதுர்கை அம்மன் கோவில்களுக்கும் சென்று வழிபட்டனர். இன்று திருவிழா நிறைவு பெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.