சென்னை
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு
|வைகுண்ட ஏகாதசி தினத்தன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பார்த்தசாரதி கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் விழாவை சிறப்பாக நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4 இணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள், வைணவ கோவில்கள் அல்லாத பிற கோவில்களின் செயல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வெள்ளிக்கிழமை (இன்று) முதல் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எளிய முறையில் விரைவாக தரிசனம் செய்திட வசதியாக ஒழுங்குப்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள்.
பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய வரிசைமுறை நீட்டிக்கவும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகள், மருத்துவ முகாம்களும், அவசர ஊர்திகளும் ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் மூலம் சுழற்சி முறையில் 150 தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தி தூய்மை பணிகள் மேற்கொள்ளவும், 1,500 போலீசாரை கொண்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி முககவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மாடவீதிகளை சுற்றி வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. என்.கே.டி. பள்ளி மற்றும் வெலிங்டன் பள்ளி வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி நாளன்று பக்தர்களுக்கு லட்டு மற்றும் கற்கண்டு பிரசாதமாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.