மதுரை
மேலூர் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்களுக்கு விருந்து
|மேலூர் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
மேலூர்,
மேலூர் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
சிறப்பு வழிபாடு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டியில் பொன்முனியாண்டி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் புலிப்பட்டி மலை மீது திருவிழா நடைபெற்று வருகின்றது. வழக்கம் போல இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்றது.
நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய ஏராளமான ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு மலை மீது ஆண்கள் மட்டுமே பங்கேற்று எரிசோறு என்னும் அசைவ கறி விருந்து நடைபெற்றது. முன்னதாக பொன்முனியாண்டி சுவாமிக்கு பாரம்பரிய முறைப்படி ``முப்புளியன் பூஜை'' எனும் படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கறி விருந்து
இதைதொடர்ந்து எரிசோறு என்னும் அசைவ கறி விருந்தில் பக்தர்கள் கலந்துகொண்டு அசைவ விருந்து சாப்பிட்டனர். அசைவ உணவை யாரும் வீட்டுக்கு கொண்டுவரக்கூடாது என்பது வழக்கம். அவ்வாறு மீதமுள்ள உணவை அங்கே மலை மீது புதைத்து வைத்து விடுவது வழக்கம். அனைவரும் சாப்பிட்ட பிறகு இருவர் இருவராக கைகளை பிடித்துக்கொண்டு மலையில் இருந்து வரிசையாக வந்தனர்.
யாரும் தனியாக செல்லக்கூடாது என்ற பாரம்பரிய வழக்கப்படி பயபக்தியுடன் வரிசையாக கீழே இறங்கி வந்தனர்.