சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
|பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே சென்று வர வேண்டும் எனவும் இரவில் பக்தர்கள் தங்குவதற்கும், ஆற்று பகுதிகளில் இறங்கி குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
மலை ஏற அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்து ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.