சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர் மூச்சு திணறி உயிரிழப்பு: மருத்துவ வசதியில்லாததால் தொடரும் அவலம் - பக்தர்கள் வேதனை
|சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். விசேஷ நாட்களில் மலைப்பகுதியில் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு,
கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன்(47). இவர் மகாளய அமாவாசை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக இன்று அதிகாலை வந்தார்.
மலைப்பாதை வழியாக வனத்துர்க்கை கோவில் அருகே நடந்து சென்ற போது கோவிந்தராஜனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அப்போது வலியால் துடித்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், அவரின் உடலை டோலி மூலம் தாணிப்பறை அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சதுரகிரி கோவிலில் எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாததால் தொடர்ந்து பக்தர்கள் உயிரிழக்கும் அவலம் ஏற்படுகின்றது. மேலும் இது மாதிரியான அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் விசேஷ நாட்களில் மலைப்பகுதி மற்றும் அடிவாரப் பகுதி, கோவில் வளாகப் பகுதிகளில் மருத்துவ குழுவினர் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.