< Back
மாநில செய்திகள்
தேவிபட்டினம் கடல் உள்வாங்கியது; நவகிரகங்கள் வெளியே தெரிந்தன
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தேவிபட்டினம் கடல் உள்வாங்கியது; நவகிரகங்கள் வெளியே தெரிந்தன

தினத்தந்தி
|
9 Sept 2023 12:14 AM IST

தேவிபட்டினத்தில் நேற்று கடல் உள்வாங்கியதால் நவகிரகங்கள் வெளியே தெரிந்தன.

பனைக்குளம்,

தேவிபட்டினத்தில் நேற்று கடல் உள்வாங்கியதால் நவகிரகங்கள் வெளியே தெரிந்தன.

தேவிபட்டினம் நவகிரக கோவில்

ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் தேவிபட்டினத்தில் நவபாஷான நவகிரக கோவில் அமைந்துள்ளது. கடலின் உள்ளே அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல கடற்கரையில் இருந்து சற்று தூரத்துக்கு பாலம் போன்ற நடைபாதை இருக்கிறது. இந்த கோவிலில் ராமபிரான் பூஜை செய்து வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது. தேவிபட்டினம் நவபாஷான நவகிரக கோவில் அமைந்துள்ள கடலானது, அவ்வப்போது உள்வாங்குகிறது.

நேற்றும் பல அடி தூரத்திற்கு உள்வாங்கியதால் கடல் நீரில் மூழ்கி இருக்கும் நவகிரகங்கள் வெளியே தெரிந்தன. தேவிபட்டினம் கோவிலுக்கு பரிகார பூஜை செய்து புனித நீராட வந்த பக்தர்கள் நவகிரகங்களை ஆச்சரியத்துடன் பார்த்து சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.

கடல் உள்வாங்கியதால் கரையோர கடல் பகுதியில் மீன்பிடி படகுகளும் மணல் பரப்பில் தடை தட்டி கிடந்தன. கடல்பாசிகள் வெளியே தெரிந்தன. மதியத்திற்கு பிறகு கடல்நீர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அக்னி தீர்த்த கடல்

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் மற்றும் துறைமுக கடலும் நேற்று உள்வாங்கி காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு அங்கும் இயல்பு நிலைக்கு கடல் திரும்பியது. ஆண்டு தோறும் காற்று வீசும் சீசனில் காலை நேரத்தில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமானதுதான் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்