< Back
மாநில செய்திகள்
தேவிபட்டினத்தில் கடல் உள்வாங்கியது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தேவிபட்டினத்தில் கடல் உள்வாங்கியது

தினத்தந்தி
|
23 Aug 2023 12:03 AM IST

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் நவபாஷாண கோவில் அருகே கடல் உள்வாங்கியது. ஏராளமான மீன்பிடி படகுகள் தரை தட்டி நின்றன

பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் நவபாஷாண கோவில் அருகே கடல் உள்வாங்கியது. ஏராளமான மீன்பிடி படகுகள் தரை தட்டி நின்றன.

தேவிபட்டினம்

ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் தொண்டி செல்லும் சாலையில் தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வரும் இந்த நவபாஷாண நவக்கிரக கோவிலில் ராமபிரான் பூஜை செய்த சிறப்பும் உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பலவிதமான தோஷ பூஜைகளை செய்வதற்காக தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக கோவிலுக்கு வருகின்றனர். இங்குள்ள கடலில் புனித நீராடி நவக்கிரகத்தை 9 முறை சுற்றி வந்து பூஜைகளையும் செய்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

கடல் உள்வாங்கியது

இந்த நிலையில் தேவிபட்டினம் நவபாஷாணம் கோவில் அருகே உள்ள கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று காலை முதலே பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. கடல் உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதியில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மீன்பிடி படகுகள் தரைதட்டியபடி நின்றன.

மேலும் கடலில் உள்ள பாசிகளும் தெளிவாக வெளியே தெரிந்த நிலையில் இருந்தன. பகல் 10 மணிக்கு பிறகு மீண்டும் உள்வாங்கி காணப்பட்ட இடத்தில் கடல் நீர் ஏறத்தொடங்கியதுடன் பிற்பகலில் அந்த பகுதி முழுவதும் கடல்நீர் ஏறி சகஜ நிலைமைக்கு திரும்பியது.

இயல்பு நிலைக்கு திரும்பியது

இது பற்றி மீனவர்கள் கூறும் போது, ஆண்டுதோறும் இந்த சீசனில் கடல்நீர் காலை நேரத்தில் வற்றுவதும் பிற்பகலில் சகஜ நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையான ஒன்றுதான். இது குறித்து பயப்பட தேவையில்லை என்றனர். கடல் உள்வாங்கி காணப்பட்டது அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழக்கமான ஒன்றாக இருந்தாலும் தேவிபட்டினம் நவபாஷாண கோவிலுக்கு நீராடி பூஜை செய்ய வந்த பக்தர்கள் அதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதேபோல் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல், பாம்பன் சின்னப்பாலம், தெற்குவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் அடிக்கடி கடல் உள்வாங்குவதும் இயல்பு நிலைக்கு திரும்புவதும் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
மேலும் செய்திகள்