விழுப்புரம்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள்
|ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது
விழுப்புரம்
முதல்-அமைச்சர் வருகை
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி வருகிற 25, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பணிகள் குறித்து 3 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். இதற்காக வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் வருகை தருகிறார். அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் மற்றும் 3 மாவட்டங்களுக்கான சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இதைத்தொடர்ந்து, வியாபாரிகள், விவசாயிகள், மாணவர்களிடம் தனித்தனியாக கலந்துரையாடுகிறார்.
முன்னேற்பாடு பணிகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. கலெக்டர் அலுவலகம் முழுவதையும் தூய்மைப்படுத்தி அதன் சுவர்களில் வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் அறைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் கலெக்டர் அலுவலகத்தில் தீத்தடுப்பு உபகரணங்கள் அனைத்தும் முறையாக செயல்படுகின்றனவா என்று நேற்று தீயணைப்புத்துறையினர் சரிபார்த்தனர். ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குவதால் அந்த சுற்றுலா மாளிகையும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.