< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

தினத்தந்தி
|
28 Aug 2023 12:15 AM IST

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

திருவாரூர் நகரில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என அமைச்சர் நேரு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திட்ட வடிவம் தயார்

திருவாரூருக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வந்தார். பின்னர் நகரில் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார். முன்னதாக திருவாரூர் மடப்புரம் குறுகிய பாலம் மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளதை அமைச்சர் நேரு பார்வையிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கான திட்ட வடிவம் தயார் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்க நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

தொடர்ந்து மாவட்ட மைய நூலகத்திற்கு சென்ற அமைச்சர், அங்கு பழுதடைந்த சாலையை பார்வையிட்டு நகராட்சி மூலம் புதிய சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்து பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து திருவாரூர் பனகல் சாலையில் உள்ள சோமசுந்தரம் சிறுவர் பூங்காவில் ரூ.41 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நகரில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

ஆற்றுபாலத்தை பார்வையிட்டார்

அதனை தொடர்ந்து இடையார்குளத்தை பார்வையிட்டு, குளத்தை தூர்வாரி கரை தடுப்புச்சுவர் அமைத்திட உரிய கருத்துரு அனுப்பி வைக்க அறிவுறுத்தினார். மேலும் நேதாஜி சாலையையும், கடைவீதியையும் இணைக்கும் ஒடம்போக்கி ஆற்று பாலத்தை பார்வையிட்டார். ஆய்வின்போது நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, நகராட்சி ஆணையர் மல்லிகா, நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ், நகராட்சி பொறியாளர் அய்யப்பன், மேலாளர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்