< Back
மாநில செய்திகள்
நாகர்கோவில், குழித்துறை  ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவில், குழித்துறை ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணி

தினத்தந்தி
|
3 Aug 2023 12:15 AM IST

நாகர்கோவில் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வருகிற 6-ந் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கிடையே ரெயில் நிலையங்களில் ரெயில்வே ஐ.ஜி.ஈஸ்வரராவ் ஆய்வு செய்தாா்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வருகிற 6-ந் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கிடையே ரெயில் நிலையங்களில் ரெயில்வே ஐ.ஜி.ஈஸ்வரராவ் ஆய்வு செய்தாா்.

மேம்பாட்டு பணி

நாட்டில் ரெயில்வே துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு ரெயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதே போல குமரி மாவட்டத்திலும் கன்னியாகுமரி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக நாகர்கோவில் சந்திப்பு மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு ரூ.11 கோடியே 38 லட்சமும், குழித்துறை ரெயில் நிலையத்துக்கு ரூ.5.35 கோடியும் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் முன் பகுதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. பயணிகளுக்கு எந்த மாதிரியான வசதி தேவை என்பதை ஆராய்ந்து அந்த பணிகளும் செய்யப்பட உள்ளன. இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரெயில்வே ஐ.ஜி. ஆய்வு

நாகர்கோவிலில் நடக்கும் விழாவையொட்டி ரெயில் நிலையத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ளும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

இந்தநிலையில் ரெயில்வே ஐ.ஜி. ஈஸ்வரராவ் நேற்று குமரி மாவட்டம் வந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். விழா நடத்தப்படும் இடம் மற்றும் மேடை அமைப்பதற்கான வசதிகளை பார்வையிட்டார். எந்த அளவில் மேடை அமைக்கப்பட உள்ளது? என்பது பற்றி கேட்டறிந்தார். மேலும் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு வசதிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் குழித்துறை ரெயில் நிலையத்திற்கு சென்றும் ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு தன்வர் பிரகுல் குப்தே, ரெயில்வே மேலாளர் முத்துவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்