< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவு
சென்னை
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவு

தினத்தந்தி
|
28 Jun 2023 1:31 PM IST

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் நேற்று, சேவைத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத், இணை கமிஷனர் ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை கமிஷனர்கள் சிவகுரு பிரபாகரன், ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- சென்னை மாநகராட்சியுடன் பிற சேவைத் துறைகளான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ ரெயில் நிறுவனம், மின்சார வாரியம், தெற்கு ரெயில்வே உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மேலும், சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும். ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்து பணிகளை விரைவில் முடிக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அனைத்து மண்டல அதிகாரிகளும் பிற துறை சார்ந்த அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டு பிரதான பணிகளை ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்த வேண்டும்.

குறிப்பாக, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். சாலைப் பணிகள் மேற்கொள்ளும்போது முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்