கள்ளக்குறிச்சி
வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம், பொன்.கவுதமசிகாமணி எம்.பி. வலியுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்புக் குழுதலைவர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி.தலைமை தாங்கினார். கலெக்டர் ஷ்ரவன்குமார், விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மணிக்கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட அரசின் இதர துறைகளின் மூலமாக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல் ஜீவன் மிஷன், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம் உள்பட 33 திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளின் முன்னேற்ற நிலை, தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விபரங்கள் மற்றும் தொடங்கப்படாமல் உள்ள பணிகளின் விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
வீடு வழங்கும் திட்டத்தில் கூடுதல் கவனம்
இதில் கண்காணிப்புக்குழு தலைவர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் நோக்கம் மத்திய, மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு முழுமையாக கிடைக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. .பொதுமக்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அனைவருக்கும் வீடுகள் கிடைக்க உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஒரு மாதத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் .மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், ஊரகவளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராணி, உதவி இயக்குனர் ரத்தினமாலா, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.