விழுப்புரம்
ஒவ்வொரு துறை அலுவலர்களும் சிறந்த மாவட்டத்திற்கான விருது பெறும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சஹாய் மீனா அறிவுரை
|ஒவ்வொரு துறை அலுவலர்களும் அரசிடமிருந்து சிறந்த மாவட்டத்திற்கான விருதை பெறும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சஹாய் மீனா அறிவுரை கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திட்டமிடல் மேம்பாட்டுத்துறையின் அரசு முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஹர்சஹாய் மீனா தலைமை தாங்கி அனைத்துத்துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் ஹர்சஹாய் மீனா கூறியதாவது:-
தொய்வின்றி
வளர்ச்சி பணிகளை திட்டமிட்ட உரிய காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகள் முழுமையாகவும், மக்களின் நீண்டகால பயன்பாட்டிற்கு ஏற்பவும் இருந்திட வேண்டும். அதேபோல் மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும் நெகிழிகளின் பயன்பாட்டை முற்றிலும் தடுத்திடும் வகையில் அனைத்து அலுவலர்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன் பொதுமக்களிடம் நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் செயல்பாடு வருங்காலங்களில் விரைந்து மேற்கொண்டு மாவட்டத்தின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கு செல்கின்ற வகையில் இருப்பதுடன். அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டு மாவட்டத்திற்கு சிறந்த விருதுகளை பெற்றுத்தரும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் யசோதா உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் விழுப்புரம் புதிய பஸ் நிலையம், உழவர் சந்தை ஆகியவற்றை அரசு முதன்மை செயலாளர் ஹர்சஹாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.