மயிலாடுதுறை
ரூ.75 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
|செம்பனார்கோவில் பகுதியில் ரூ.75 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
பொறையாறு:
வளர்ச்சி திட்ட பணிகள்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி, கருவாழக்கரை, நடுகரை ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஆறுபாதி ஊராட்சியில் மேலகிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் நெற்களம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு பணிகள் தரமானதாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, சமுதாய உறிஞ்சி குழி ரூ.14 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதையும், மேலப்பாதி கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் செம்பனார்கோவில்-மேலப்பாதி சாலையினை தார் சாலையாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.
பள்ளி கட்டிடம்
பின்னர், கருவாழக்கரை ஊராட்சி மருதூர் கிராமத்தில் பள்ளி கட்டிடம் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டுள்ளதையும், அதே பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டில் மாணவிகளுக்கான கழிவறை கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
மேலும் ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.