கடலூர்
வளர்ச்சி, கண்காணிப்புக்குழு கூட்டம்
|கடலூரில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ரமேஷ் எம்.பி. தலைமையில் நடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த 2022-23-ம் ஆண்டு 2-வது காலாண்டிற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கண்காணிப்புக்குழு தலைவர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் எம்.பி. தலைமை தாங்கினார்.
மாவட்ட கலெக்டரும், குழுவின் செயலாளருமான பாலசுப்பிரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சிந்தனைச்செல்வன், கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி. கிரியப்பனவர், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணன், துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
41 திட்ட பணிகள்
தொடர்ந்து மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களில் ஒவ்வொரு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி, மத்திய மற்றும் மாநில அரசால் வெளியிடப்பட்ட நிதிகள், பயன்பாடு மற்றும் செலவிடப்படாத நிலுவைகள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
வேளாண்மை துறையில் மண்வள அட்டை இயக்கம், பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும், கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம், சமூக பாதுகாப்பு திட்டம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறை வாரியாக செயல் படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
அறிக்கை
தொடர்ந்து அரசின் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு கடலூர் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களையும் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.
3-வது காலாண்டு கூட்டத்தின் போது 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, அதற்கான அறிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று ரமேஷ் எம்.பி. தெரிவித்தார். அனைத்து பணிகளிலும் போதிய முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் நகராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.