பசும்பொன்னில் இன்று தொடங்குகிறது தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா
|விழாவை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், வாகன சோதனை மையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா இன்று முதல் தொடங்குகிறது. விழாவின் முதல் நாளான இன்று காலை 7 மணி அளவில் மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் ஆன்மிக விழா தொடங்குகிறது. தொடர்ந்து சிறப்பு யாக பூஜை நடைபெற்று பாலகணபதி, பாலமுருகன், தேவர் திருமகனார் கோவில் ஆகியவற்றிற்கும் முதலாம் ஆண்டு வருசாபிஷேக பூஜையும் நடக்கிறது.
பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து தேவரின் வாழ்க்கை, வரலாறு புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைக்கிறார். மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 7 மணிக்கு தேவரின் தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் 2-ம் நாளான நாளை பொதுமக்கள் மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
முக்கிய நிகழ்ச்சியான ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவானது நாளை மறுநாள் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் தலைமையில் நடக்கிறது. அன்றையதினம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மாியாதை செலுத்துகின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், அன்வர் ராஜா, மணிகண்டன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்துகின்றனர்.
அதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், சசிகலா, ம.தி.மு.க. சார்பில் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை தேவர் திருமகனார் நினைவாலய அறங்காவலர் காந்திமீனாள் தலைமையில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
இந்த விழாவை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், வாகன சோதனை மையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவர் குருபூஜை விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.