கடலூர்
வாலிபர் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
|ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.
கடலூர் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று பண்ருட்டி தாலுகா கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து, சோதனை செய்தனர். அதில் 2,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், வேலூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும், விழுப்புரம் மாவட்டம் வீரட்டிக்குப்பத்தை சேர்ந்த அபுதாகீர் என்கிற சையது அபுதாகீர் (வயது 31) என்பவருடன் சேர்ந்து ரேஷன் அரிசி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைதான அபுதாகீர் என்கிற சையது அபுதாகீர் மீது ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக விழுப்புரம் மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசில் 8 வழக்குகள் உள்ளன.
இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, அபுதாகீரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தடுப்புக்காவல் சட்டத்தில் அபுதாகீரை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபுதாகீரிடம், அவரை தடுப்புக்காவலில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.