நாமக்கல்
வாடகைக்கு வசிப்பவர்களின்விவரங்களை தெரிவிக்க வேண்டும்
|பரமத்திவேலூர் பகுதியில் வாடகைக்கு வசிப்பவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு உட்கோட்ட எல்லைக்குட்பட்ட வேலகவுண்டம்பட்டி, நல்லூர், பரமத்தி, ஜேடர்பாளையம் மற்றும் வேலூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளில் புதிதாக வாடகைக்கு குடி அமர்த்தும் வீட்டின் உரிமையாளர்கள் பற்றிய முழு விவரம் தெரிந்தும், அவர்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று முகவரிகளை சரிபார்த்து குடி அமர்த்த வேண்டும். முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடி அமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை கொண்டு வந்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் தங்களது வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் முழு விவரத்தை சேகரித்து தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகே அவர்களை வாடகைக்கு குடி அமர்த்த வேண்டும். மேலும் வாடகைக்கு குடி இருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் பரமத்தி வேலூர் தாலுகா, சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு மற்றும் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி வீடுகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.