தேனி
விவசாயிகளின் விவரங்களைஇணையதளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள்:இன்று தொடங்குகிறது
|விவசாயிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் இன்று தொடங்குகிறது என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக grains.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிபடுத்திடவும், விவசாயிகளின் விவரங்களை ஒற்றை சாளர முறையில் பதிவு செய்து அரசின் பல துறைகளின் பல்வேறு திட்ட பலன்களை பெற்றிடவும் இது ஏதுவாக இருக்கும்.
வரும் காலங்களில் அரசின் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையின்றி எளிதில் பெற்றிடும் வகையிலும் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட விவசாயிகளின் ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு விவரம் மற்றும் நில உரிமை ஆவணங்களை, கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து சிறப்பு முகாம்கள் அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் இன்றும் (சனிக்கிழமை), வருகிற 3, 5, 6-ந்தேதிகளிலும் நடக்கின்றன. இந்த முகாமை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம். இந்த தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.