திருப்பத்தூர்
3,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
|வாணியம்பாடி அருகே 3,500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
வாணியம்பாடியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள கொரிபள்ளம் வனப்பகுதியில், சாராயம் காய்ச்சப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் ஆய்வு செய்ய திம்மாம்பேட்டை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் திம்மாம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையிலான போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அடர்ந்த வனப்பகுதியில், சாராயம் காய்ச்சுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 3,500 லிட்டர் சாராய ஊறல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த கேன்கள் மற்றும் அடுப்பை அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பாக திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர்.